(52) "இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்.
(53) "(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவர வர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" (என்று இறைவன் கூறுகிறான்).
(54) "(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன."
(55) இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
(56) நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்;
(57) "மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?" என்று கூறினான்.
(58) "அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோருக்கும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).
(59) "யவ்முஜ் ஸீனத்" (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற் பகல்) நேரமும் ஆக இருக்கட்டும்" என்று சொன்னார்.
(60) அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீ; ண்டும் வந்தான்.
(61) (அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் "உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்" என்று கூறினார்.
(62) சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
(63) (சூனியக்காரர்கள் மக்களை நோக்கி;) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
(64) "ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்" (என்றுங் கூறினார்).