(9) ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
(10) பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
(11) இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
المنافقون Al-Munaafiqoon
(1) "(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, "நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்" என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்" என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், "நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்" என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்" என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
(2) இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர், நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
(3) இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும், ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது, எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
(4) இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர், சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள், இவர்கள்தாம் (உம்) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான், இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?