(32) இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
(33) விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கல் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்கு உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும் அதற்கான பொருளை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
(34) இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
(35) அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது அக் கண்ணாடி ஒளிவீசம் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
(36) இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.