(19) குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
(20) (அவ்வாறே) இருளம் ஒளியும் (சமமாகா).
(21) (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
(22) அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
(23) நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
(24) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
(25) இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசம் வேதத்துடனும் வந்திருந்தார்க்ள.
(26) பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.
(27) நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
(28) இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
(29) நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
(30) அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.