(44) இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
(45) மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
(46) நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
(47) "அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்" என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
(48) மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.
(49) ஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.
(50) அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.
(51) முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் "நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்" என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
(52) இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
(53) இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி) "நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்து தான் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்" என்று கூறுவீராக.