(113) யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.
(114) இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
(115) கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.
(116) இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
(117) (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
(118) இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
(119) (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.