(54) "எங்களுடைய தெய்வங்களில் சிலகேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை" (என்றும் கூறினார்கள்; அதற்கு) அவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்" என்று கூறினார்.
(55) "(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்" (என்றும் கூறினார்).
(56) நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழிpயலிருக்கின்றான்.
(57) "நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எனற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).
(58) நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.
(59) (நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.
(60) எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக 'ஆது' கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான 'ஆது' கூட்டத்தாருக்கு கேடுதான்.
(61) இன்னும், ஸமுது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."
(62) அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்" என்று கூறினார்கள்.