الطارق At-Taariq
(1) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
(2) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(3) அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
(4) ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
(5) மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
(6) குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
(7) முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
(8) இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
(9) இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
(10) மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
(11) (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
(12) (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
(13) நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
(14) அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
(15) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
(16) நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
(17) எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
الأعلى Al-A'laa
(1) (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
(2) அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
(3) மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
(4) அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
(5) பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
(6) (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
(7) அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
(8) அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
(9) ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
(10) (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
(11) ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
(12) அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
(13) பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
(14) தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
(15) மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.