(7) நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.
(8) இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறிவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் "நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை" என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும், அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
(9) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள், ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(10) ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம், ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது, எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.
(11) ஈமான் கொண்டவர்களே! சபைகளில் "நகர்ந்து இடங்கொடுங்கள்" என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்" என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள், அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.