(111) ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
(112) மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.
(113) இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறை) தூதர் வந்தார் ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செயதவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது.
(114) (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.
(115) (நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(116) உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.
(117) (இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
(118) இன்னும் யூதர்களுக்கு, உமக்கு நாம் முன்னரே விளக்கியுள்ளவற்றைத் தடுத்து விட்டோம்; (எனினும்) நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.