(17) அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
(18) (நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
(19) கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
(20) மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(21) இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
(22) அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
(23) மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
(24) ஃபிர்அவ்ன், ஹாமான், ஃகாரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ "(இவர்) பொய்யுiரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.
(25) ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்; "இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.