(11) வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்
(12) வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
(13) நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
(14) அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே யன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
(15) எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பன், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றும் கூறுவீராக.