(12) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றீராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
(13) நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான், ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள், இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள், மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
(14) எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர், அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
(15) அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.
(16) அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
(17) அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது, அவர்கள் நரகவாதிகள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
(18) அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள், அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள், அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
(19) அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!
(20) நிச்சமயாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.
(21) "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன்.