(26) "ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும்.
(27) பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"
(28) "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).
(29) (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள்.
(30) "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
(31) "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
(32) "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
(33) "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது.
(34) இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
(35) அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
(36) "நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்).
(37) ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
(38) அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.