(23) இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்; "நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சவடுகளையே பின்பற்றுகின்றோம்" என்று கூறாதிருக்கவில்லை.
(24) (அப்பொழுது அத்தூதர்,) "உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள்; "நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்" என்று சொன்hர்கள்.
(25) ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!
(26) அன்றியும், இப்றாஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி; "நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்" என்று கூறியதையும்;
(27) "என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்" (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)!
(28) இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்றாஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.
(29) எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.
(30) ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது "இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்" என்று அவர்கள் கூறினர்.
(31) மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?"
(32) உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்களா? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையோ நாமே பங்கிட்டு இருக்கிறோம்." இவர்களில் சிலர், சிலரை ஊழயத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.
(33) நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.