(66) மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) "நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்" என்று கட்டளையிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
(67) அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
(68) மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
(69) யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
(70) இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
(71) நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
(72) (போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்;. உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால், "அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்" என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
(73) அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; "நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
(74) எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.