(4) இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
(5) மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
(6) நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.
(7) எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.
(8) எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
(9) மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
(10) எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
(11) அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.