(26) இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.
(27) நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
(28) நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
(29) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
(30) எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
(31) அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.
المرسلات Al-Mursalaat
(1) தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
(2) வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
(3) (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
(4) (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
(5) (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
(6) (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
(7) நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
(8) இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
(9) மேலும், வானம் பிளக்கப்படும் போது-
(10) அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
(11) மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
(12) எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
(13) தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
(14) மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
(15) (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
(16) முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
(17) பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
(18) குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
(19) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.