(36) இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், "உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?" - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.
(37) மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
(38) "நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?" என்று அவர்கள் கேட்கிறார்கள்.
(39) தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
(40) அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
(41) இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்ப பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்நது கொண்டது.
(42) "உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?" என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
(43) அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
(44) எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட் காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?