(188) (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."
(189) அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
(190) அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்."
(191) எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
(192) அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
(193) (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
(194) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
(195) அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று.