(92) தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல. உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை. இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்;. இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
(93) எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
(94) முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்;. அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.