(69) (முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
(70) இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்றாஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள், தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
(71) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(72) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.