التوبة At-Tawba
(1) (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
(2) நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
(3) அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
(4) ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
(5) (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(6) (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.