(9) (நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
(10) உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(11) (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
(12) (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
(13) இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
(14) "இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு" என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
(15) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
(16) (எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.