(10) எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
(11) முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;. இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
(12) நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்; "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்."
(13) அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.