الرعد Ar-Ra'd
(1) அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகவும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.
(2) (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
(3) மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(4) இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன.
(5) (அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், "நிச்சயமக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?" என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.