(28) (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.
(29) (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
(30) நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
(31) அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.
(32) (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
(33) அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
(34) இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக "நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்" என்று கூறினான்.