(42) "பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்" என்று (நபியே!) நீர் கூறும்.
(43) ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
(44) எவன் நிராகரிக்கின்றானனோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
(45) ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
(46) இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.
(47) மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
(48) அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.
(49) எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.
(50) (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.