(40) (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் "இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்" என்று (அல்லாஹ்) கேட்பான்.
(41) (இதற்கு மலக்குகள்;) "நீ மிகத் தூய்மையானவன்; நீயே எஙகள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்" என்று கூறுவார்கள்.
(42) "இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அறியாயம் செய்தார்களே அவர்களிடம்" நாம் கூறுவோம்.
(43) நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் "இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
(44) எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.
(45) மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூரட்டும்)
(46) "நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை உங்களுக்கு கடினமான வேதனை வரவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை."
(47) கூறுவீராக "நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்கியாக இருக்கின்றான்."
(48) கூறுவீராக "என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்."