(31) (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
(32) பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வி; ன அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
(33) அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைககள் பட்டா(லானவையா)க இருக்கும்.
(34) "எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
(35) "அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான தங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை" (என்றும் கூறுவார்கள்).
(36) எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
(37) இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) "சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை" (என்று கூறுவான்).
(38) நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.