الفتح Al-Fath
(1) (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
(2) உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
(3) மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்)
(4) அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்னோன்.
(5) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களின் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்) அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான் வெற்றியாகும்.
(6) அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
(7) அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
(8) நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.
(9) (ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, அவனுக்கு (சன்மார்க்கத்தில்) உதவி, அவனைச் சங்கை செய்து, காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்).