(27) எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும், இன்னும், "நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.
(28) கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
(29) (நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான், அவன் மீதே நாங்கள் ஈமாக் கொண்டோம், மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!"
(30) (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
القلم Al-Qalam
(1) நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
(2) உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
(3) இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
(4) மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(5) எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
(6) உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
(7) உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
(8) எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
(9) (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
(10) அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
(11) (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
(12) (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.
(13) கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.
(14) பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்
(15) நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்.