الجن Al-Jinn
(1) நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
(2) "அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
(3) "மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
(4) "ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
(5) மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
(6) "ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
(7) "இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
(8) "நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
(9) "(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.
(10) "அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
(11) "மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.
(12) "அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
(13) "இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.