(31) நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
(32) தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
(33) ஒரே வயதுள்ள கன்னிகளும்.
(34) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
(35) அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
(36) (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
(37) (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
(38) ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
(39) அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
(40) நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
النازعات An-Naazi'aat
(1) (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
(2) (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
(3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
(4) முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
(5) ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
(6) பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
(7) அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
(8) அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
(9) அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
(10) "நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
(11) "மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
(12) "அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
(13) ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
(14) அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
(15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?