(8) அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.
الزلزلة Az-Zalzala
(1) பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
(2) இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
(3) "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
(4) அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
(5) (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
(6) அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
(7) எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
(8) அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
العاديات Al-Aadiyaat
(1) மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
(2) பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
(3) பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
(4) மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
(5) அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
(6) நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
(7) அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
(8) இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
(9) அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-