الإسراء Al-Israa
(1) (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
(2) இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
(3) நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
(4) நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; "நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்" என்று அறிவித்தோம்.
(5) எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
(6) பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
(7) நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் ஆனுப்பினோம்).