مريم Maryam
(1) காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
(2) (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
(3) அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
(4) (அவர்) கூறினார்; "என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
(5) "இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக!
(6) "அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!"
(7) "ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).
(8) (அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார்.
(9) "(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்" என்று இறைவன் கூறினான்.
(10) (அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று வேண்டினார்; "நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான்.
(11) ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், "காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹீ செய்யுங்கள்" என்று உணர்த்தினார்.