(52) இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
(53) மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
(54) (நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
(55) அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
(56) (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
(57) மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
(58) இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
(59) ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
(60) தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
(61) அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
(62) ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
(63) இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.
(64) (மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்."