(21) மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்; "எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?" என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
(22) அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
(23) இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
(24) அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும், சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
(25) இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.
(26) அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுகு; கு கடுமையான நாளாகவும் இருக்கும்.
(27) அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான்.
(28) "எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?"
(29) "நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!" (என்று புலம்புவான்.)
(30) "என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்" என்று (நம்) தூதர் கூறுவார்.
(31) மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
(32) இன்னும்; "இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.