(12) (அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
(13) மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
(14) "இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்).
(15) அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்" என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும்.
(16) "அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்."
(17) அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) "என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?" என்று (இறைவன்) கேட்பான்.
(18) (அதற்கு) அவர்கள் "இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறுவர்.
(19) நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்" (என்று இறைவன் கூறுவான்).
(20) (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும்தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.