(14) இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியைம் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
(15) (ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார் அங்கு இருண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா); "இது ஷைத்தானுடைய வேலை நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்" என்று கூறினார்.
(16) "என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார் அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
(17) "என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்" என்று கூறினார்.
(18) மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கேரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸர் "நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்' என்று அவனிடம் கூறினார்.
(19) பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) "மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை" என்று கூறினான்.
(20) பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, "மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமெ ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நான் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்" என்று கூறினார்.
(21) ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; "என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!" என்று பிரார்த்தித்தார்.