(36) ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்; "இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை" என்று கூறினார்கள்.
(37) (அப்போது மூஸா) கூறினார்; "அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்."
(38) இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்; "பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்" என்றே கருதுகின்றேன்.
(39) மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
(40) ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்.
(41) மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
(42) இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
(43) இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).