(12) மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், "எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்" என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).
(13) மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் "நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்" என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
(14) ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம்; மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்" (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
(15) நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
(16) அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
(17) அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.
(18) எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
(19) எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உப சரிக்கப்படுவார்கள்).
(20) ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு "எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.