(21) மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
(22) எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.
(23) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
(24) இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.
(25) அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.
(26) இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க மாட்டார்களா?
(27) அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
(28) "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றித் (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)?" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
(29) "அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர், நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது - அவர்களுகு; குத்தவணையும் கொடுக்கப்பட மாட்டாது.
(30) ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்ப்பீராக! நிச்சயமாக அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் தாம்.