(36) மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(37) (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
(38) நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
(39) (இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(40) முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
(41) ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
(42) இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
(43) உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.