(63) (நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; "அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது" என்று நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.
(64) நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.
(65) அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பாவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
(66) நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
(67) "எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
(68) "எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்).
(69) ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
(70) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
(71) (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
(72) நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.
(73) எனவே (இவ்வமானிதத்திற்கு மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்; களையும்;, முனாஃபிக்கான பெண்களையும்;, முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.