(28) தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
(29) ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
(30) அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
(31) "அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள்" என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
(32) மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
(33) அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
(34) மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
(35) அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
(36) பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
(37) இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
(38) இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் வித்ததாகும்.
(39) இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
(40) சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.