(45) மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.
يس Yaseen
(1) யாஸீன்.
(2) ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
(3) நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
(4) நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
(5) (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
(6) எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
(7) இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி; ச்சயமாக உண்மையாகிவிட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(8) நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
(9) இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
(10) இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
(11) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
(12) நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.