(7) அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
(8) நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
(9) அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
(10) பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
(11) வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
(12) (நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
(13) நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
(14) "உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
(15) நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
(16) அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
(17) அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
(18) அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
(19) அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
(20) உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(21) உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
(22) அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
(23) ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
(24) இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
(25) அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்).
(26) எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
(27) அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார்.
(28) (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
(29) பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.
(30) (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.