(107) அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
(108) (நபியே!) நீர் கூறுவீராக் "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர்க தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்."
(109) (நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.
هود Hud
(1) அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.
(2) நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். "நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்" (என்றும்).
(3) "நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்பகிறேன்" (என்றும்).
(4) "அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வரவேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்" (என்றும் நபியே! நீர் கூறுவீராக).
(5) "அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து ) மறைத்துக் கொள்வதற்காககத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்" (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!